பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார் என்றும், இவரை வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கி வெற்றிகிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திரபாலர் கோயில் அமைந்துள்ளது.

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது.

இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிருதயுகத்தில் திருக்கயிலையிலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் சத்யலோகத்திலும், கலியுகத்தில் பூலோகத்திலும் வழிபடுவதென தேவர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி இந்த விநாயகர் தற்போது இங்கு அருள்புரிகிறார்.

கடல்நுரையாலான இவர் அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர். இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார்.