மும்பை

சிவசேனா கட்சி முதல்வர் பதவி தேவை எனப் பிடிவாதம் பிடிக்கும் நிலையில் அக்கட்சிக்குத் துணை முதல்வர் பதவி அளிக்க பாஜக முன்வந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவ்சேனா கட்சியும் காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.   சட்டப்பேரவையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்குச் சென்ற முறை 122 இடங்களும் சிவசேனாவுக்கு 63 இடங்களும் கிடைத்தன.   தற்போது பாஜகவுக்கு 105 இடங்களிலும், சிவசேனாவுக்கு 56 இடங்களிலும் வெற்றி கிடைத்துள்ளது.

பாஜகவுக்கு 17 எதிர்ப்பு கோஷ்டி மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.   தற்போது பாஜக – சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள போதிலும் அதிகார போட்டி காரணமாக ஆட்சி அமைப்பதில் சிக்கல் உள்ளது.   சிவசேனா கட்சி தங்களுக்கு முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் சரிசமமான பங்கு ஆகியவற்றைக் கோரி வருகிறது.

பாஜக முதலில் இதற்கு மறுத்த போதிலும் தற்போது அமைச்சரவையில் பாதிப் பங்கை அளிக்கத் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.   ஆனால் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்க அக்கட்சி விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.   மாறாக சிவசேனா கட்சிக்குத் துணை முதல்வர் பதவி அளிக்க பாஜக தயாராக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போதைய முதல்வரான தேவேந்திர ஃபட்நாவிஸ் தொடர்ந்து முதல்வராக நீடிக்க பாஜக விரும்பும் வேளையில் சிவசேனா கட்சி தங்களது தலைவரின் மகனும் புதிய சட்டப்பேரவை உறுப்பினருமான ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி வருகிறது.  இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சரவை அமைப்பதில் தொடர்ந்து இழுபறியில் உள்ளது.