பேரிடரை சந்திக்கும் போது குறை கூறாமல் முடிந்ததை செய்வதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து பார்வையிட வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் அதுகுறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். நல்ல முறையில் குழந்தை சுர்ஜித் மீட்கப்படுவான் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எந்தவித கட்சி பேதமுமின்றி, அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. 24 மணி நேரமும் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றிவரும் அதிகாரிகளின் பணி பாராட்டுக்குரியது. சுர்ஜித்தை மீட்க மாநில அரசுக்கு, மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அனைத்து ஊழியர்களும் தன் வீட்டு துயரத்தை போல நினைத்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

சுர்ஜித்தை புதிய வழியில் மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. பேரிடரை சந்திக்கும் போது குறை பேசுவது முறையல்ல. நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவது தான் சரியாக இருக்கும். மீட்பு நடவடிக்கைக்காக எல்லா முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.