சென்னை:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, சமீப காலமாக பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேசி வருகிறது. துணைவேந்தர் நியமனம், காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில், நேரடியாக பாரதியஜனதா தலைமையை விமர்சிக்காமல், கண்டனம் தெரிவித்து வருகிறது.

மேலும், கவர்னரின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில், பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதா, தொடர்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேணடுகோள் விடுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது, பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தல்களை சந்தித்து வந்தது.

இந்நிலையில, உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாமக  தலைமையில் கடந்த 30ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில்,  தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் 32  விவசாயச் சங்கத் தலைவர்களின் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் ஏப். 11-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்வதிலும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, அவரது நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து,  பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், கவர்னரின் நடவடிக்கையையும் எதிர்த்து பாமக போராட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ராமதாசுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறதா ? வெளியேறிவிட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி உள்ளார்.

மேலும்,  வெளியேறியதாக பாமக முறையாக அறிவிப்பு ஏதும் செய்ததா? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர்,  இதுவரை வெளியேறவில்லையெனில் காவிரி பிரச்சனையை முன்வைத்து வெளியேறுகிறோம் என இப்போதாவது அறிவிக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அன்புமணி பேசும்போது,  திமுகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றுகின்றன. மத்தியில் பாஜவை ஆதரிக்கிறோம். ஆனால் மாநிலத்தில் பாமக தலைமையை ஏற்றுக்கொண்டால் தான் கூட்டணி.

பாஜ சிறிய கட்சி. பாமக பெரிய கட்சி. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.