புதன் கிழமை மதியம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற  எமிரேட்ஸ் விமானம்  (இ.கே. 521) அவசரமாகத் தரை இறக்கப்பட்டபோது நடுப்பகுதி தரையில் இடித்து தீப்பரவியது.
விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான ஊழியர்களும் மரணத்தின் பிடியிலிருந்து அதிர்ஸ்டவசமாகத் தப்பினர்.

விமானத்தில் பயணம் செய்ததில் பெரும்பான்மையானவர்கள் “இந்தியர்கள்” (226)

இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.
தி நியூஸ் மினுட் மின்னிதழ் அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளிடம் தொடர்பு கொண்டு விமானத்தின் உள்ளே என்ன நடந்தது எனக் கேட்டது.
கொல்லத்தின் இருந்து அமெரிக்காவிற்கு துபாய் வழியாகப் பயணம் செய்ய இருந்த 41 வயதான சாய் பாஸ்கர், விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டபோது நடந்த சம்பவங்களை விளக்கினார்.
நான் விமானத்தின் கடைசி வரிசையில் ஜன்னலருகில் அமர்ந்திருந்தேன். தரையைத் தொடும் வரை விமானத்தில் எந்தக் கோளாரும் இல்லை.
எந்தத் தொழிற்நுட்பக் கோளாறு குறித்தும்  விமானத்தில்  அறிவிப்பு செய்யப்படவில்லை. எனவே. நாங்கள் இது வழக்கமான பாதுகாப்பான தரையிறக்கமாக அமையுமென்றே நம்பினோம்.
ஆனால், விமானம் இறங்கிய வேளையில் மிகப்பெரும் சத்தம் கேட்டது. நாங்கள் சுதாரிப்பதற்குள் விமானம் இடது பக்கமாகச் வளைந்தது.
விமானம் எங்கும் புகைமூட்டம் நிரம்பியது. பிராணவாயு குழாய் திறந்தது. அவசரக் கால கதவுகள் திறக்கப்பட்டன.
அதிகமான புகையினால் வழி தெரியாமல் திகைத்தோம். எனவே எல்லா கதவுகளையும் வெளியேறப் பயன்படுத்த முடியவில்லை.
நான் பார்த்தவரையில், பெரும்பாலான பயணிகள நான் அமர்ந்திருந்த பின்பக்கம் நோக்கியே ஓடி வந்தனர். பின்பக்க அவசரகால கதவினைப் பயன்படுத்தி ஒவ்வொருவராக முண்டியடித்துக் கொண்டு விமானத்தை விட்டு வெளியேறினர்.
பகல் நேரமாகையால், சூரியவெளிச்சம் கொஞ்சமாக விமானத்துள் இருந்தது பயணிகள் தப்ப ஏதுவாக இருந்தது.
இதுவே இரவு நேரமாக இருந்திருந்தால் அனைவரும் நிச்சயமாக உயிர் பிழைத்திருக்க முடியாது. புகையினால் பலர் செய்வதறியாது திகைத்தாலும், விமான ஊழியர்களின் சிறப்பான ஒத்துழைப்பால் அனைவரும் விமானத்தை விட்டுப் பத்திரமாக வெளியேறமுடிந்தது.
பயனிகள் அனைவரையும் வெளியேற்றிய பின்னரே விமான ஊழியர்கள் வெளியேறினர்.
நாங்கள் வெளியேறி 100 மீட்டர் தொலைவில் இருந்தபோது விமானத்தின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
மற்றொரு பயணி டாக்டர் ஷாஜி கூறுகையில், ” விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியவுடன் விமானத்துள் புகை சூழ்ந்தது.
நாங்கள் அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு இறக்கை வெடித்து சிதறியது. சிறிய காயங்கள் தவிர கவலைபடும்படியான சம்பவம் ஏதுமில்லை. எனது செருப்பை நான் தொலைத்துவிட்டேன். அதனால் விமானத்தளத்தில் சூடு அதிகமாக இருந்ததால்
எனது பாதங்களில் தீப்புண் உண்டாகியுள்ளது. எனது மனைவிக்கு முகத்தில் காயம்பட்டுள்ளது என்றார்.

இந்த விபத்தின் காரணமாக இந்த விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய 42  விமானங்களும், அங்கிருந்து கிளம்ப வேண்டிய 60 விமானங்களும் திருப்பிவிடப்பட்டன.

 
நன்றி: தி நியூஸ்மினுட்