சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளது. இந்தி நிலையில், மொத்த பகையும் தீர்க்க ஈரோடு வருகிறோம் என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பிப்ரவரி 27 ஆம் தேதி இடைதேர்த்தல் நடக்கவுள்ளது.  இந்த இடைத்தேர்தலில் மறைந்த எம்எல்ஏவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டிப்பாக பெண் வேட்பாளர் களமிறங்குவார் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளனர்.

இநத் நிலையில்,  நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன்  பதிவிட்டுள்ள டிவிட்டில்,, வாழ்த்துகள் இளங்கோவன் அவர்களே! மொத்த பகையும் தீர்த்துக் கொள்ள ஈரோடு வருகிறோம்” என்று சவால் விட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் என்ற போட்டி நிலவுகிறது. மூன்றாவதாக நாம் தமிழர் கட்சி களமிறங்கினார் திமுக கூட்டணி கட்சியின் வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது. அது அதிமுகவுக்கு சாதகமாகவே அமையும்.

ஏற்கனவே  கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட மறைந்த திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே வெளும் 9 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம். ஆனால்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திற்கு வந்தது.  அதுபோல மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய நிலையில், தேமுதிகவின் ஆதரவு யாருக்கு என்பதும் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சியின் டிவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.