அடுத்த ஆண்டுக்கான தண்ணீர் தற்போதே திறப்பு: கர்நாடக முதல்வர் குமாரசாமி

பெங்களூரு:

மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச இருப்பதாகவும், அடுத்த ஆண்டுக்கான தண்ணீரை தற்போதே தமிழக்ததிற்கு திறந்துவிடுகிறோம் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.

கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டம் இன்று காலை பெங்களூருவில் உள்ள  விதான் சவுதா வில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும்  செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் குமாரசாமி,  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்றார்.

இதன் காரணமாக கபினி அணை மற்றும் கேஆர்எஸ் அணைகளில்  இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 71 ஆயிரம் கனஅடி  தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று முதல் மேலும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

 தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய தண்ணீரை இப்போதே திறந்து விடு கிறோம் என்று கூறிய குமாரசாமி,  ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி. தண்ணீர் நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் யாருக்கும் பலன் இல்லாமல் வீணாக கடலில் கலக்கிறது. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது என்றார்.

இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் துறை அமைச்சர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் டில்லியில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது இதுகுறித்து ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும் என்ற குமாரசாமி, நமது விவசாயிகளை பாதுகாக்க மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை என்றார்.

இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து  தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன். மேலும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நான் தயாராக உள்ளேன் என்றும், இது குறித்து அவர்களுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் குமாரசாமி கூறினார்.

கர்நாடக முதல்வரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காவிரி ஒழுங் காற்று குழு கூட்டத்தில், கர்நாடக அரசு சார்பில் வாதிடப்பட்டபோது, கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும்  உபரி நீரையும் கணக்கிட்டு, தமிழகத்திற்கு அதிகப்படியான நீர் வழங்கியுள்ளதாக கூறிய நிலையில், தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி அடுத்த ஆண்டு தமிழகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரை தற்போதே கொடுத்து வருவதாக கூறி உள்ளார்.
English Summary
Water is already open for next year for Tamilnadu: Karnataka Chief Minister Kumaraswamy