விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ளது.

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

சோழநாட்டில் அ‌மைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். ‌சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.

இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம்பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம்.