சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும், அவர் கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும்  கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்திலும் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிற்து.

 தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிமுக வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது.  இதன் காரணமாக அதிமுகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முழுமையாக ஓரம் கட்டப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இபிஎஸ் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  மற்றொரு தரப்பினர் அலுவலக வாயிலில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். அதே போல மாநிலம் முழுவதும்  மற்ற ஊர்களிலும் அதிமுகவினர், பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ந்தனர்.

 

ஈரோடு பெரியார் நகரில் எடப்பாடியாரின் தீவிர பக்தன் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைசெயலாளர் டாக்டர் சுனில் வி, மேட்டூர் நகர கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு சந்திரசேகர் எம்பி அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி, மேளதாளங்களுடன் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள். ஒன்றிய செயலாளர் திரு செல்வராஜ், மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் திரு சந்திரசேகர், திரு செல்வம், கொளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு சரவணன் துணைத்தலைவர் பி.பி. செல்வம், அரிபாபு, சதீஷ்குமார், சூரியகலா, தேன்மொழி, லோகநாதன் மற்றும் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.