பொதுவாக, திரைப்பட விமர்சனம் என்றால், கதை குறித்துதான் ஆரம்பிப்பார்கள்.
இந்த படத்தில், கதை நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷில் இருந்துதான் தவங்க வேண்டும்.
மாயனாக, அப்படி ஒரு சிறப்பான நடிப்பு.
மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துபோக, மகளும் அவருடன் செல்ல.. தனிமையில் வாடுகிறார் மாயன். பார்த்துக்கொண்டு இருந்த காவல் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, போதையில் மூழ்குகிறார்.
நடுத்தர வயதுக்கு மேற்பட்ட தோற்றம், நிதானமான நடை, கூர்மையான பார்வை என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
அவரது (முன்னாள்) மனைவியும், மகளும் விபத்தில் இறக்கிறார்கள். அது விபத்தல்ல கொலை என்பதை கண்டுபிடிக்கும் மாயன், குற்றவாளிகளை எப்படி மடக்குகிறார் என்பதை சுவாரஸ்யமான த்ரில்லராக சொல்லி இருக்கிறார்கள்.
அதுவும், குற்றவாளிகள் யார் என அறியும்போது, அதிர்ச்சி! அதே போல் மாயன் எடுக்கும் முடிவும் அதிர வைக்கிறது.
அறியவேண்டிய தகவலேடு ரசிக்கத்தக்க வகையில் சொல்லி இருப்பது இயக்குநர் பத்மகுமாரின் சிறப்பு.
மாரிமுத்து, இளவரசு, பூர்ணா, மது ஷாலினி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பகவதி பெருமாள், வழக்கம் போல பயந்த கண்களுடன் வந்து போகிறார். ஆனாலும், இவர்தான் கொலை செய்திருப்பாரோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
ஜிவி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
கோடை வெயிலுக்கு இதமாக, வால்பாறை மலைப்பகுதியில் படப்படிப்பு நடத்தி உள்ளனர். அதே போல ஒளிப்பதிவாளரும் அற்புதமாக படம் பிடித்துள்ளார்.
மருத்துவ மாபியாக்களால் அப்பாவி மக்கள் – நாமும் சேர்த்துதான் – எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்!