அத்தியாயம் 3:
ப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடர்கதைகள் மிகவும் குறைந்துவிட்டன. டி20 தலைமுறை சிறுகதைகளையே வேண்டாம் என்கிறது, ஒரு நிமிடக்கதைகளே வாசிப்பு சுகம்.
ஆனால், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு பத்திரிகையில் ஒரே நேரத்தில் பல சிறுகதைகள், விதவிதமான தொடர்கதைகள் வரும்: க்ரைமுக்கொன்று காதலுக்கொன்று குடும்பக்கதையொன்று என.
இந்தக் கதைகளை வாராவாரம் காத்திருந்து படிப்பது தனி சுகம். நமக்குப் பிடித்த கதையின் நிறைவில் ‘முற்றும்’ என்ற சொல்லைப் பார்க்கும்போது, ஒருபக்கம் வருத்தமும் இன்னொருபக்கம் மகிழ்ச்சியும் வரும்.
magazine-806073_960_720
முற்றுதல் என்றால், முதிர்தல் என்று பொருள், ‘முத்தின கத்தரிக்காய்’ என்று சமீபத்தில் ஒரு திரைப்படம் வந்தது. அது ‘முற்றின கத்தரிக்காய்’ என்பதன் கொச்சைவடிவம்தான்.
ஆகவே, ‘முற்றும்’ என்றால், முதிரும், முடியும் என்று பொருள். அந்தக் கதை இந்த இடத்தில் நிறைவடைகிறது, ஆகவே, ‘முற்றும்’ என்கிறார்கள். ‘முற்றியது’ என்று எழுதினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
இலக்கணத்தில் ‘வினைமுற்று’ என்றால், வினை பூர்த்தியடைந்துவிட்டது என்று பொருள். அதாவது, ஒரு செயல் நிறைவடைந்துவிட்டதைச்சொல்லும் சொல்.
உதாரணமாக, ‘வந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இங்கே ‘வருதல்’ என்பதுதான் வினை. ‘வந்தான்’ என்றதும் அந்த வினை முழுமையடைகிறது.
அதையே ‘வந்த’ என்று எழுதினால், அது முழுமையடையவில்லை, அதன்பிறகு ஒரு சொல்லைச் சேர்த்தால்தான் முழுமையடையும். உதா: ‘வந்த பையன்’.
வினைமுற்றின் சிறப்பு, அது ஒன்றைச்சொல்லிப் பலவற்றைப் புரியவைக்கும். ஆகவே, ஒரு சொல் ஐந்தாறு சொற்களுக்குச் சமமாகிவிடும்.
அது எப்படி?
(தொடரும்)