அத்தியாயம்:  9
பெங்களூர் + இல் = பெங்களூரில். குழப்பமே இல்லை.
அந்த ஊரின் பெயரை ‘பெங்களூரு’ என்று மாற்றியபின், ஒரு குழப்பம் தொடங்கியது:
பெங்களூரு + இல் = பெங்களூருவில்? அல்லது பெங்களூரில்? எது சரி?
vidhana_soudhaநான் ரொம்ப நாள் ‘பெங்களூருவில்’ என்றுதான் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தப் பெயர் சிதையாமல் இருப்பதுபோல் ஓர் உணர்வு.
அதன்பிறகு, ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘சச்சின் டெண்டுல்கர் பந்துவை அடித்தார் என்று எழுதுவாயா?’ என்று கேட்டார்.
‘ச்சே, கேட்கறதுக்கே நாராசமா இருக்கே!’ என்றேன்.
‘பெங்களூருவில்ன்னு எழுதறது அதேமாதிரிதான்’ என்று சிரித்தார் அவர், ‘பந்து+ஐ=பந்தை, பந்து+இல்=பந்தில், அதையெல்லாம் பந்துவை, பந்துவில்ன்னு எழுதவேண்டியதில்லை. அதுபோல, பெங்களூரு+இல்=பெங்களூரில்ன்னு எழுதினாப் போதும்.’
’புரியுது, ஆனா, பெங்களூருங்கற பேரை நாம சரியா எழுதலைன்னு ஒரு மனத்தடை வருது!’
’அது தேவையில்லாத மனத்தடை, அப்படி எழுதித்தான் தீரணும்ன்னா, பெங்களூரு நகரத்தில்ன்னு எழுதிக்கோ. அல்லது, பெங்களூரு-இல்ன்னு எழுது.’
இந்த அறிவுரை எனக்குப் பிடித்திருந்தது. உகரத்தில் முடியும் எல்லாச் சொற்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, சக மனிதர்கள்மீது அன்பைச் செலுத்துங்கள், அன்புவைச் செலுத்தவேண்டாம்!
(தொடரும்)
Images: