வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர், தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி தூவாக்குடியில் உள்ள நண்பரின் இல்ல விழாவுக்குச் சென்றார்.  அப்போது துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே சென்ற போது, வாகன சோதனைக்காக காவலர்கள் அவரது இருசக்கர வாகனத்தை மறித்தனர். ஆனால் ராஜா, நிற்காமல் சென்றார். அவரை  காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று உதைத்ததில் கீழே விழுந்து உஷா உயிரிழந்தார்.

உஷாவின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறியழுத அவரது கணவர் ராஜா, தனது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அழுதார்.

அவரது கதறல் தமிழகம் முழுதும் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. பெண்.. அதுவும் கர்ப்பிணிப்பெண் மரணமடைந்தது  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் சம்பவப்பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி, குறிப்பிட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட காவலர் காமராஜ் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் உஷாவின் உடற்கூறாய்வு முடிவுகளை, திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அனிதா, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் உயிரிழந்த உஷா கர்ப்பமாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.