சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 22ந்தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு பெற்றவர்கள் ஏப்ரல் 4ந்தேதி பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்தலில் செலவிடப் பட்ட தொகைக்கான கணக்கினை  பராமரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட உரிய படிவத்தின் உண்மை நகலை 30 நாட்களுக்குள்  தாக்கல் செய்ய வேண்டும். அதாவது,  தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்டத் தேர்தல் அலுவலர் / ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சியிடமும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய நகராட்சி ஆணையரிடமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய பேரூராட்சியின் செயல் அலுவலரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து நகர்ப்புற அமைப்புகளில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் செலவு கணக்குத் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம், 1920 பிரிவு 49(2-A) மற்றும் தொடர்புடைய மாநகராட்சிகளின் சட்ட பிரிவின்கீழ் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்), விதிகள், 2006, பிரிவு 116(13)-ன்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.