டில்லி.

மிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன.

அதிமுக இரண்டாக பிளவுபட்டதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் இரட்டைலையை முடக்கி வைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து இரட்டைஇலையை தனது அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைதாகி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தமிழகஅரசின் ஆலோச கராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னாவும் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் டில்லியில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் முக்கிய பாலமாக இருந்து வந்ததுடன் தமிழக அரசின் ஆலோசகராகவும் பணிபுரிந்து வந்தார்.

இரட்டை இலை சின்ன லஞ்ச விவகாரத்தில் இவருக்கு தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ராஜிநாமா செய்துள்ளதாகவும், ராஜிநாமா கடிதத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக, டில்லி போலீஸார் அவரிடம் ரகசியமான முறையில் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் டில்லி வட்டார தகவல்கள் கூறுகிறது.