சென்னை: திமுகவில் ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு தலைவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, திருச்சி சிவா வீடுமீது தாக்குதல் நடத்தியதுடன், இதுகுறித்து புகார் கொடுக்க திருச்சி சிவா ஆதரவாளர்களை  காவல்நிலையத்திற்குள் புகுந்து பெண் போலீசாரை தாக்கிவிட்டு, கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் கேஎன்.நேரு ஆதரவு திமுக நிர்வாகிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. கருப்புக் கொடி காட்டியவர்களை கைது செய்து வைத்திருந்தபோது காவல் நிலையத்துக்குள் புகுந்து அவர்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பியின் வீடு திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் ஆபிசர்ஸ் காலனியில்  உள்ளது. இந்த பகுதியில்  திருச்சி மாநகராட்சியால் ரூ.31 லட்சம் செலவில் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு  திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதி எம்.பி.யான திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை. இது திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் புதன்கிழமை காலை ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு காரில் வந்தனர். எம்.பி திருச்சி சிவா வீட்டருகே 10-க்கும் மேற்பட்டோர் கூடி நிற்பதைக்கண்ட அமைச்சர் கே.என்.நேரு, வரவேற்பு அளிப்பதாக கருதி காரிலிருந்து கீழே இறங்கினார். அப்போது, திருச்சி சிவா ஆதரவாளர்கள் திடீரென கருப்புக் கொடியை எடுத்துக்காட்டி அமைச்சருக்கு எதிரான முழக்கமிட்டனர்.

இதைக்கண்ட அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் காரில் ஏறி அமர்ந்து, என்ன பிரச்சினை எனக் கேட்டார். அப்போது, கல்வெட்டில் எம்.பி பெயர் போடாதது ஏன், அவரை அழைக்காதது ஏன் என சிவாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் கே.என்.நேரு முனுமுனுத்தபடி அங்கிருந்து காரில் சென்று, நவீன இறகுப்பந்து மைதானத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளரான, ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி தலைமையில் கவுன்சிலர்கள் முத்துசெல்வம், காஜாமலை விஜய், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் திடீரென திருச்சி சிவாவின் வீட்டுக்கு வந்து அங்கிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், மற்றும் வீட்டின் மீது கம்புகளாலும், கற்களாலும் தாக்குதல் நடத்தினர். வெளியிலிருந்து நாற்காலிகளைத் தூக்கி வீசினர்.   காம்பவுன்ட் சுவரிலிருந்த அலங்கார விளக்குகளை அடித்து உடைத்தனர்.

இதைக்கண்ட போலீஸார் அங்குவந்து எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் கே.என்.நேரு அந்த வழியாக மீண்டும் வந்தார். திமுகவினரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுவிட்ட நிலையில், அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை போலீஸார் அழைத்துச் சென்று செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர்.

இதுகுறித்த அறிந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்ளான  கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ், ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் அந்த காவல்நிலையத்துக்குச் சென்று உள்ளே நுழைய முயற்சித்தனர். அங்கு பணியிலிருந்த காவலர் சாந்தி என்பவர் அவர்களைத் தடுத்தார். எனினும், அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு உள்ளே புகுந்த நபர்கள் அங்கிருந்த நாற்காலிகளால் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலானது. காவல்நிலையத்திற்குள் புகுந்து ஒருவரை தாக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த தாக்குதலின்போது பெண் காவலர் சாந்திக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,  திருச்சி சிவா ஆதரவாளரான சரவணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டதால்,  இருவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையறிந்த காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி அங்கு விரைந்து நடந்த சம்பவங்களை விசாரித்தார். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தார்.

இந்தச் சூழலில் கவுன்சிலர் புஷ்பராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். இதைக்கண்ட உதவி ஆணையர்கள் கென்னடி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அங்குசென்று அவர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். அதைத்தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி வீடு, அவரது ஆதரவாளர்கள் வைக்கப்பட்டிருந்த செசன்ஸ் கோர்ட் காவல் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமைச்சர் கே.என்.நேருவை வழிமறித்து வாக்குவாதம் செய்தது குறித்து கேட்கச் சென்றபோது திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக அமைச்சர் நேரு தரப்பில், செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் திமுகவினர் ஐந்து பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திமுகவினர் ஐந்து பேரும் காஜாமலை நீதிபதி குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் இரண்டு நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜி, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகிய ஐந்து பேருக்கும் வரும் மார்ச் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

எம்.பி திருச்சி சிவா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பஹ்ரைன் சென்றுள்ள நிலையில், அவரது தரப்பிலிருந்து யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்து திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து காவல் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி சிவா இன்று பக்ரைனில் இருந்து திருச்சி திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில், திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காவல்நிலையத்தின் உள்ளேயே புகுந்து காவலரை தாக்கிவிட்டு, எதிரியினை தாக்கியிருப்பது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின்மை எவ்வாறு உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே உள்ளது.