திருச்சி:

பொதுமக்கள் கொடுக்கும் புகாரை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது உத்தரவை திருச்சி போலீசார் மதிக்காமல் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

திருச்சி கல்லுக்குழி அருகே உள் செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் என்பவரது மகன் காணாமல் போனது தொடர்பாக, காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், புகாரை பதிவு செய்ய மறுத்து காவல்துறையினர் அடாவடி செய்துள்ளனர்.

தற்போது காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 நாட்களுக்கு பிறகு புகார் பதிவு செய்யப்பட்டு எப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 7ம் தேதி  முதல் சண்முகநாதன் மகன் தமிழழகன் (வயது 24).வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை என்றும், அவரது செல்போன் ஆஃப் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் கடந்த 10ந்தேதி அன்று திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையில் புகார் பதிய சென்றனர். அப்போது, தனது மகன் தமிழழகன் மீது ஏற்கனபே பொன்மலை காவல்நிலையத்தில் புகார் இருப்பதால், அவர் தலைமறைவாகி இருக்கலாம் என நினைத்து 3 நாட்களாக தேடி வந்ததாகவும், ஆனால், அவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை, அவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் கொடுத்தனர்.

ஆனால் போலீசார், அந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில்,  கடந்த 25ம் தேதி சண்முகதான் தனது உறவினர்களுடன் சென்று, மாவட்ட தணை கமிஷனரிடம் புகார் அளித்தார்.

அதன்பிறகே அவரது புகார் பதியப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், தமிழழகன் எரித்துக் கொலை செய்யப்பட்டது தகவல் வெளியானது.

இதனால் அதிர்ந்துபோன கண்டோன்மென்ட் காவல்நிலைய போலீசார், நேற்று தான் தமிழழகன் மிஸ்ஸிங் என்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் திருச்சிக்கு வந்த டிஜிபி திரிபாதி, காவல்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை யின்போது, பொதுமக்கள் எந்தவொரு புகார் கொடுத்தாலும், அதை பதிவு செய்து உடடினயாக  எப்ஐஆர் போட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் திருச்சியில், முக்கியமான ஒரு புகாரை பதிவதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதால், சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ள  நிகழ்வு நடைபெற்றுள்ளது. புகாரைத் தொடர்ந்து உடனே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழழகன் ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.