சாலைப்பணியின்போது தங்கப் புதையல்: சத்திஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு

ராய்ப்பூர்:

சாலை பணியின்போது, சத்திஸ்கர் மாநிலத்தில் தங்கம், வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்தது. இது வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொண்டகான் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த பணி அந்த பகுதியில் உள்ள கொர்கொட்டி – பெட்மா கிராமங்களின்  இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது, சாலை பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், சாலைக்கான பள்ளம் தோண்டும்போது, மண்பானை ஒன்றை கண்டெடுத்து உள்ளார்.  அதை திறந்து பார்த்தபோது, அதனுள் 57 தங்கக்காசுகள் மற்றும்  ஏராளமான  வெள்ளிக்காசுகள் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்டம் நிர்வாகம் மற்றும்  மாநில காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து, புதையல் பானையை கைப்பற்றினர்.

இதுகுறித்து ஆய்வு செய்த தொல்லியல் துறை,  இந்த நாணயங்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வித்தர்பா என்ற பகுதியில் யாதவ் வம்சத்தினர் ஆட்சி செய்தபோது பயன்பாட்டில் இருந்த நாணயங்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் இதுபோல மேலும் பல புதையல்கள் இருக்கலாம் என எண்ணி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புதையலை தேடி வருகின்றனர்.
English Summary
57 Gold Coins from 12th Century Unearthed During Road Construction in Chhattisgarh A pot containing 57 gold coins, a silver coin, and a gold earring was unearthed on July 10 during the construction of a road between Korkoti and Bedma villages.