சென்னை: மேம்பால கட்டுமானப் பணி காரணமாக சென்னை தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

சென்னையில், மேம்பாலம் கட்டும்பணி, மெட்ரோ ரயில்பணி போன்றவைகளால் பல சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளதுடன் பல சாலைகள் மூடப்பட்டும் உள்ளன. இதனால் சென்னையில் தினசரி போக்குவரத்து நெரிசல் வழக்கமாகி வருகிறது.

இந்த  நிலையில், மக்கள் அதிகம் கூடும் தி.நகர் பகுதியில் மேம்பாலம் கட்டும்பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்த மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,  சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து சென்னை அண்ணா சாலை சிஐடி ஒன்றாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக நாளை முதல் 9 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்குஉஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1-வதுமெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மா பேட்டை சந்திப்பு,தெற்கு மேற்கு போக்கு சாலை,மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பேருந்துகள், தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்துதெற்கு உஸ்மான் சாலை வழியாகஅண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலை சிஐடி1-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைவழியாக தி.நகர் பேருந்து முனையத்துக்கு செல்லும் வாகனங்கள், வழக்கம் போல செல்லலாம்,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.