கேரள வெள்ளத்தால் ரூ.8316 கோடி இழப்பு : பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் ரூ. 8316 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளன.   அத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.   மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தினால் சுமார் 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   அத்துடன் 6 பேர் காணாமல் போய் உள்ளனர்.   ராணுவ வீரர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.     வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 440 நிவாரண முகாம் திறக்கப்பட்டுள்ளன.   இங்கு 50 ஆயிரம் பேர் தங்கி இருக்கின்றனர்.

நேற்று கேரள முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வை இட்டார்.   அவருடன் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோர் சென்றனர்.   அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக இடுக்கியில் தரையிறங்க முடியாமல் வயநாட்டுக்கு சென்றது.

அதன் பிறகு முதல்வர் கல்பற்றாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், “மழையால் மரணம் அடைந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சமும், வீடுகள் இழந்தவர்களுகும் தலா ரூ. 4 லட்சமும் வழங்கப்படும்.  இந்த வெள்ளத்தினால் இதுவரை ரு.8316 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Total loss in kerala due to flood is Rs 8316 crore : CM
-=-