திருவண்ணாமலையில் நாளை ‘மகா தீபம்’! பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வந்த நிலையில், நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

பஞ்ச பூதத்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம்.

இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே, கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.

நாளை மகா தீபத்தை முன்னிட்டு,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.  அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மகாதீபத்தையொட்டி   அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வாணை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்படும்.

நாளை  மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறு கிறது. அப்போது ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் அர்த்தநாரீசுவரர் திருக்காட்சி பக்தர்களுக்குக் கிடைக்கும். சிவனே மலை ரூபமாக அண்ணாமலையில் எழுந்தருள்கிறார். அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணைதொடும் அளவுக்கு கேட்கும்.

இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருவதை குறிப்பிடும் வகையிலேயே மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த  மகாதீபம் மலையில் தொடர்ந்து 11 நாள்கள் எரியும்.  தீபத்தை காண மலைமீது பக்தர்கள் ஏறுவார்கள். பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு மலை மீது ஏறுவதற்கு 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை தீப விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்கள் பெற விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யலாம்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்பட   அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்களும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags: Maha deepam, tamilnadu, Thiruvannamalai, tomorrow, திருவண்ணாமலையில் நாளை 'மகா தீபம்'! பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்