சென்னை: என்எல்சி நடவடிக்கையை கண்டித்து, நாளை கடலூர் மாவட்டத்தில்  ஸ்டிரைக்  என பாமக அறிவித்துள்ள நிலையில், நாளை ஸ்டிரைக் கிடையாது, கடைகள், பள்ளிகள், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மக்களின் போராட்டத்தை மீறி என்எல்சி தமிழ்நாடு அரசு பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

என்எல்சி நடவடிக்கைக்கு, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.  மேலும், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தினர். ஆனால், அமைச்சர், கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்து வருகிறார்.

இநத் நிலையில், என்எல்சி நடவடிக்கையை கண்டித்து, நாளை  கடலூரில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுமா? பேருந்துகள் ஓடுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளதுடன், மீறி கடைகள் திறக்கப்பட்டாலோ, பேருந்துகள் இயக்கப்பட்டாலோ தாக்கப்படும் அபாயம் இருப்பதாக வும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை வழக்கம் போல் கடைகள், வணிகள் நிறுவனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்  பாலசுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சி தலைவர், கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவித்துள்ளது. ஆனால், நாளை எந்தவொரு வேலை நிறுத்தமும் இல்லை.  வழக்கம்போல் பேருந்துகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கும். கடைகளும் திறந்திருக்கும் என்றார்.

மேலும், , என்.எல்.சி. நிர்வாகத்திடம் கூடுதல் இழப்பீடு பெற்று ஒப்புக்கொண்டவர்களின் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அனைவரின் நிலமும் கையகப்படுத்தப்பட வில்லை என்றவர், பந்த் தொடர்பாக,  பாட்டாளி மக்கள் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்றவர், நாளை   உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பேருந்துகளும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.