திருவண்ணாமலை: இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி உள்ளிட்டவை 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், தற்போது தீபம் ஏற்றுவதற்கான பொருட்களும் மலை உச்சியை அடைந்துள்ளது.

இன்று காலை 3 மணி அளவில் அண்ணாமலையார் ஆலயத்தில் பரணிதீபமும் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது சுபிட்சத்தை வழங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று இந்து தர்ம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, எம்பெருமான் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னிஸ்தலமடான திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அதற்காக 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், நாளை மாலை ஏழரை அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும்.


இதற்கான கொப்பரை, திரி, நெய் போன்றவைகள், பூசைகள் செய்யப்பட்டு மலைமீது ஏற்றும் பணி நடைபெற்றது. தற்போது அவைகள் 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சி சென்றடைந்துள்ளது.  அங்கு கொப்பைரையை வைத்து அதனுள் நெய் மற்றும் திரி வைத்து, மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுவதை கண்டு தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.  இன்று மாலை மகாதீபம் ஏற்றும் போது,   அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டும் இதனையடுத்து வாண வேடிக்கை நடைபெறும். மலை மீது ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் தீபம் அணையாது என்பது அதிசயமாகும்.

மகாதீபம் ஏற்றியதும், வீடுகளிலும், மற்ற கோவில்களிலும்  ஏற்றலாம். இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நம் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள். செல்வ வளம் பெருகும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.