‘குரு பார்க்க கோடி புண்ணியம்:’ தமிழகத்தில் உள்ள முக்கிய குரு பரிகார ஸ்தலங்கள்

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். 

இன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.  துலாம் ராசியில்  இருந்து வந்த குருபகவான் தற்போது அங்கிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்…

குருபெயர்ச்சியை ஒட்டி சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் குரு ஸ்தலமான  திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள  அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

வக்கிரங்களில் சுபக் கிரகமான குருபகவான் புத்திர காரகனாகவும் தன காரகனாகவும் விளங்குகிறார். வாழ்வில் வளமும் நலமும் பெற குருபகவானின் அருள்பார்வை அவசியம் ஆன்மிகம் கூறுகிறது.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல ஒருவருடம் ஆகிறது. ஒருவருடைய ராசியில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சி பெற்றாலும் அந்த ஜாதகத்திற்கு உரியவருக்கு தர்ம சிந்தினைகள் ஏற்படும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், துலா ராசியில் இருக்கும் குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று இரவு 10.05 மணி முதல் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி இம்மாதம் 11 ம்தேதி குருபெயர்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்கள், குரு பரிகாரத் தலங்களில் யாகங்களும் பரிகாரப் பூஜைகளும் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் இந்த சிறப்பு யாகங்களில் பங்கேற்கலாம். குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு.

 குருபகவான் பரிகார தலங்கள்:

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். இங்கு அவரை வழிபடுவது மிகவும் உகந்ததது.

இங்கு தட்சிணாமூர்த்தியை  24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால் இந்த வழிபாடு முறை தொடர்ந்து வருகிறது.

சென்னை வில்லிவாக்கம்  அருகில் பாடியில் உஙளள  வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் சிவனை வணங்கும் விதமாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இவரை இன்று வழிபடலாம்.

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தென் திட்டை என்ற இடத்தில் ராஜகுரு  கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.

மயிலாடுதுறை மயூரநாதர் – மேதா தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.  காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் 12ராசிக்களின் கட்டம் வடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இந்த ஸ்தலத்தில் குரு பகவான் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

வேலூர்மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயத்தில் குருபகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இவரை வழிபட கல்வி செல்வமும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சி நாளில் சிறப்பு யாகங்களும் நடைபெற உள்ளது.

தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும்.

இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள்,

 தூத்துக்குடி மாவட்டத்தில் 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.

பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

இந்த கோவில்கள் மட்டுமல்ல சிவ ஆலயங்களில் நவகிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.

வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு வணங்கவேண்டும்.

குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும்.  குருபரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'குரு பார்க்க கோடி புண்ணியம்:' தமிழகத்தில் உள்ள முக்கிய குரு பரிகார ஸ்தலங்கள், Today is the Guru Peyarchi: Important guru temples in Tamilnadu including Alangudi Guru Temple
-=-