விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் கடையடைப்பு

Must read

சென்னை :

டில்லியில்  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

“தமிழகம் முழுதும்  60 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அண்டை மாநிலங்கள் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், பயிர்கள் கருகியதால், இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கடந்த 14ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் துறை சார்ந்த பிற மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளித்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை.

பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள்  போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து  தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் பரவலாக கல்லூரி மாணவர்களும், விவசாயிகளும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ( ஏப்ரல் 3ம் தேதி)  தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் அறிவித்தது.  இதற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன., அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியும் விவசாயிகள் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 60 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று  வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. காலை 6 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை நடைபெறும்.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தெய்வசிகாமணி, “ஆடு, மாடுகளுடன் சாலை மறியல் நடத்தப்படுவதோடு,  அதோடு சில இடங்களில் ரோட்டிலேயே சமையல் செய்து சாப்பிடும் போராட்டமும் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article