கயா,

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோவில் அருகே வெடிகுண்டுகள் கண்டெடக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தற்போது புத்தமத தலைவர் தலாய்லாமா பீகார் வந்துள்ள நிலையில், வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை கொல்ல பயங்கரவாதிகள் சதி செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், கவுதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் புத்த கயா என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு புத்தமத தலைவர் தலாய் லாமா வந்திருக்கிறார். இந்நிலையில்,  தலாய் லாமா தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகில் வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.  இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மேலும் வெடிகுண்டுகள் உள்ளதா என புத்தகயா முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தலாய்லாமா மீது  வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக  அப்பகுதியில் பாதுகாப்பு  மேலும்,  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.