திருவனந்தபுரம்

லையாள நடிகரும், பா ஜ க. எம்.பியுமான சுரேஷ் கோபி அடுத்த பிறவியில் பிராமிணராக பிறக்க ஆசைப்படுவதாக  ஏக்கத்துடன் தெரிவித்துள்ளது பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பிரபல மலையாள நடிகரும் பா ஜ க நியமன எம்.பி.யுமான சுரேஷ் கோபி திருவனந்தபுரத்தில் நடந்த யோகஷேம சபை என்ற பிராமண சங்க  கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், “எனக்கு மறு பிறவியில் நம்பிக்கை உள்ளது.  நான் அடுத்த பிறவியில் பூணூல் அணியும் வகுப்பான பிராமண வகுப்பில் பிறக்க ஆசைப்படுகிறேன்.   மேலும் சபரிமலையில் தலைமை குருக்களாகும் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும்.  அப்படி இல்லை எனில் கடவுளை தொட்டு அபிஷேகம் செய்யும் பாக்கியமாவது கிடைக்க வேண்டும். பூணூல் அணிந்தவர்கள் கடவுளுக்கு சமம் என நான் கருதுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.   #அடிமைகோபி என்னும் ஹேஷ்டாக் உடன் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

“ஒரு மனிதன் பிறப்பால் உயர்வதில்லை, அவன் செய்யும் நல்ல காரியங்களால் உயர்கிறான், அடுத்த பிறவியில் பிறக்கும் போதே சுரேஷ் கோபி பூணூலுடன் பிறக்கட்டும்” என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டிருப்பதோடு,  ஒரு பிறந்த குழந்தை பூணூலுடன் இருப்பதைப் போல படத்தையும் பதிந்துள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் கே பி ஜெயகுமார் தனது முகநூல் பதிவில். “பிராமணர்கள் பிரம்மாவை அறிந்தவர்கள் எனவும் தனது கர்மாவை சரியாக செய்யும் யாரும் பிராமணனே என சொல்லப்படுகிறது.  ஆனால் உண்மையில் அது போல பிராமணன் ஆனவர் யாரும் தற்போது கிடையாது.  இவை எல்லாம் புராண காலத்தில் ஏகலைவனும் சம்புகனும் பிராமணர் ஆனதாக சொல்லப்படுவதோடு சரி.  அந்தக் கூட்டத்தில் சுரேஷ் கோபி தான் பிராமணன் இல்லை எனும் ஒரு தாழ்வு மனப்பான்மையில் இப்படி உளறி இருக்கிறார்.” என சுரேஷ் கோபியை கடுமையாக  விமரிசித்துள்ளார்.

நேரத்துக்கு ஏற்றபடி பேசும் சுரேஷ்கோபி

“சுரேஷின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பிராமணர்கள் கூட்டம் என்பதால் அப்படி பேசியிருக்கிறார். அவர் நடித்த படங்களில் அமைந்துள்ள வசனங்கள் பலவும் பிராமணருக்கு எதிரானதாகவே இருக்கும்.  உதாரணமாக பைத்ரகுளம் என்னும் மலையாள திரைப்படத்தில் அவர், “நான் பிராமணன் அல்ல.  நான் ஒரு மனிதன்.  நான் எனது பூணூலை அறுத்து விட்டேன்.  அது மட்டும் அல்ல பிராமண அடையாளமான எனது குடுமியையும் மாற்றி விட்டேன்” என அனல் பறக்க வசனம் பேசியிருக்கிறார்” என்றும் ஒரு கருத்து கேரளாவில் உலவுகிறது.