சென்னை: அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இது தமிழக மக்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையத்தில் நடைபெறும் என்ற அமைச்சர் அன்பில் மகேசின் அறிவிப்பு காரணமாக, தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் எழுந்து, அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு, அரசு பள்ளிகளில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையில் நிலவிவந்த குளறுபடிகள் சரியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேசின் திறமையற்ற மற்று அனுபவமற்ற நிர்வாகத்தில், ஏராளமான குளறுபடிகள் நிலவி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட பல தகவல்கள், திட்டங்கள், பின்னர் பொதுமக்களின் எதிர்ப்பு, ஆசிரியர்களின் எதிர்ப்பு காரணமாக அவை வாபஸ் பெறப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. 10லட்சம் ஆசிரியர்கள் மற்றும் கோடிக்கணக்கான மாணவர்களைக்கொண்ட, மாநிலத்தின் முதுகெலும்பான பள்ளிக்கல்வித்துறையை திறமையாக செயல்படுத்த முடியாமல் அவர் திணறுவதே இதுபோன்ற அறிவிப்புகளுக்கு சாட்சியாக காணப்படுகிறது என கல்வி ஆலோசகர்கள் குற்றம் சாட்டு கின்றனர். 

எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால், புதிய கல்விகொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று வெளியான சுற்றறிக்கை, இது அரசியல் மட்டத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  சுற்றறிக்கையை வெளியிட்ட இணை இயக்குனர் அமுதவல்லி பலிகடாவாக்கப்பட்டு, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அந்த பயிற்சி திட்டத்தை திரும்பப் பெறுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சருக்கே தெரியாமல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு துறையில் எப்படி பணிகள் நடைபெறுகின்றன என்ற கேள்வியை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர். 

நடப்பு கல்வியாண்டில் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மாணவர் சேர்க்கை பணிகள் கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்றும், 3+ வயதுடைய குழந்தைகள் அனைவரையும் LKG-யிலும், 4+ வயதுடைய குழந்தைகள் அனைவரையும் UKG-யிலும் சேர்த்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒருங்கிந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 40,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, பரிட்சார்த்த முறையில் (3 ஆண்டுகளுக்கு) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகள் துவங்கப்பட்டது.

இந்த அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதல் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு LK.G மற்றும் U.K.G ஆகிய இரண்டு வகுப்புகளையும் ஒரு சேர ஒரே ஆசிரியர் கையாளும் வகையில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், அனுபவம் வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும் புரிதல் இன்மையும் நீடிப்பதாகவும், தொடக்க வகுப்புகளில் 4000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை என்றும் கூறி அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகளை நிறுத்துவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

தமிழகஅரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு தீவிர அழுத்தம் கொடுத்து வந்தன. பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூடுவது ஏன் என்று பலரும் கேள்விகளை எழுப்பினர். 

இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எல்கேஜி யூகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை என்றும் , சமூக நலத்துறையில் அவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக நலத்துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே அங்கன்வாடிகளில் பணியாற்றி வரும் நிலையில் , அவர்கள் எப்படி எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த முடியும் என்றும்,  அமைச்சரின் பதில் மழுப்பலாக இருக்கிறது என்று  அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இப்படி தொடர்ச்சியாக பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்தே,  முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பெற்றோர்கள் விரும்பும் போது,  அதை அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் போது, அதற்கு எதிரான ஒரு முடிவை எப்படி எடுக்கலாம் என, முதல்வர்,  அமைச்சரிடம் கேட்டதாகவும், நிதிப் பிரச்சனை இருந்தாலும் எல்கேஜி யூகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் கற்றல்- கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2381 சிறப்பு ஆசிரியர்கள் நிரப்படுவார்கள் என்று தெரிவித்தது. இதிலும், பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது அதையும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகஅரசின் குழப்பமான அறிவிப்புகளால், நடப்பாண்டு எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு குழப்பமான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது, பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான ஆசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் அனைத்து துறைகளைவிட பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையே கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

மொத்தத்தில் இலவசங்களை வாரியிறைத்து தமிழக மக்களை சேம்பேறிகளாகவும், குடிகாரர்களாகவும் மாற்றி வரும் திராவிட அரசுகள், இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தை பாழாக்காமல் இருந்தால் சரி.

பள்ளிக்கல்வித்துறை மீண்டும் குளறுபடி: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்!