சென்னை: அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துவரி, மின்கட்டணம் உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில்,  அரசு கேபிள் டிவி கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இன்று, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.  இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ள  அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், அரசு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருப்பதாக, விமர்சித்தார்.