மதுரை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்க ஆவின் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு சம்பந்தமாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது, பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர்மீது ஏற்கனவே  வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி  பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த தாக ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ள நிலை யில், தற்போது,  திருப்பதி லட்டு தயாரிப்பிற்கான நெய் அனுப்பியதில் முறைகேட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆவின் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் மதுரை ஆவினில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நியமனம், ஒப்பந்தம், பொருட்கள் விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பா அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விசாரணையில், திருப்பதி வெங்காடஜலபதி கோவில் லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு நெய் விற்பனை செய்யப்பட்டதிலும், தீபாவளி இனிப்பு வகைகள் ஆகியவற்றிலும் மோசடி நடைபெற்றதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று லாப நோக்கத்தில் ஆவின் நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட தனியார் நிறுவனங் களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவணங்கள் குறித்தும், அது தொடர்புடைய இடங்களிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

வேலை வாங்கித்தருவதாக பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த புகாரில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை தனிப்படை அமைத்து போலிஸார் தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.