திருப்பதி தரிசனம்: வி.ஐ.பி.க்களுக்குக் கட்டுப்பாடு?

திருப்பதி ஏழுமலையான்  தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.க்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திருமலை தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில் உள்ள, ஏழுமலையான் கோவில் மிகவும் பிரபலமானது.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இடையில் வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு தரிசன்துக்கு நேரம் ஒதுக்குகிறது. வி.ஐ.பி.,க்களுக்கு, அதிகாலை முதல், காலை, 10:00 மணிவரை, மூன்று விதங்களில் தேவஸ்தானம், ‘பிரேக்’ தரிசனம் வழங்கி வருகிறது.

இந்த தரிசனம், நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படுகிறது. இவற்றை கவனிக்க, அவர்களுக்கென தனித்தனியாக மக்கள் தொடர்பு செயலர்கள் இருக்கின்றனர். மேலும், வி.ஐ.பி.,க்கள் தினசரி பிரேக் தரிசனத்திற்காக, பரிந்துரை கடிதங்களும் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பரிந்துரை கடிதங்கள் வழங்குவது, தற்போது அதிகரித்துள்ளது. இதனால்  சாதாரண பக்தர்களுக்கு காலையில், 10:00 மணிக்கு மேல் மட்டுமே, ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆகவே, காத்திருப்பு அறையில் காத்திருக்கும் சாதாரண பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு, விரைவில் தரிசனம் வழங்க, தேவஸ்தானம்  ஆலோசித்து வருகிறது.

இதையடுத்து, திருமலைக்கு வரும், வி.ஐ.பி.,க் களுக்கு, மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்க அனுமதிப்பது குறித்து , தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதனால் வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை குறைவதுடன், சாதாரண பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் அளிக்க முடியும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஆனால், இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சம்மதிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர்கள் ஒப்புக்கொண்டால் வி.ஐ.பி. தரிசனத்துக்கு கட்டுப்பாடு வரக்கூடும். இது சாதாரண பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று பக்தர்கள்  தெரிவிக்கிறார்கள்.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tirupathi darshan: Regulation for  VIPs, திருப்பதி தரிசனம்: வி.ஐ.பி.க்களுக்குக் கட்டுப்பாடு?
-=-