ஆஸ்திரேலியாவின் பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கதிரியக்க குடுவை மாயமானதைத் தொடர்ந்து அதனைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த கதிர்வீச்சு குடுவை தசாவதாரம் படத்தில் வருவது போல் எந்த ஒரு பெரிய அழிவையும் ஏற்படுத்தாது என்றபோதும் இதில் உள்ள சீசியம் -137 தனிமம் சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

இதை தொட்டால் புற்றுநோய் போன்ற கடுமையான நோயை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இதை பொதுமக்கள் பார்த்தால், விலகி இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே சுமார் 1,400 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் சுமார் 6 மில்லி மீட்டருக்கு – 8 மில்லி மீட்டர் அளவே இருக்கும் இந்த கதிரியக்கக் குடுவை கண்டுபிடிப்பது சவாலான காரியம் என்று அந்நாட்டு தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை கூறியுள்ளது.

சுரங்க நடவடிக்கைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சீசியம்-137 தனிமம் அடங்கிய குடுவை ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே ஒரு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

லாரியில் இருந்து இந்த பொருள் எப்படி மாயமானது என்பதைக் கண்டுபிடிக்க லாரி எந்தெந்த இடங்களில் எல்லாம் நின்றது என்பதை முதலில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தவிர, இந்த பொருளைப் பார்க்கும் நபர்கள், ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.