தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் போராட்டங்கள் தானே தவிர ஜல்லிக்கட்டு அல்ல. இதை வைத்து ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்துவிடக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் நடைபெறுவது ஒரு விதமான உணர்ச்சிமிக்க போராட்டம் தான்.  இது ஜல்லிக்கட்டு அல்ல.  இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்து உச்சநீதிமன்றமோ அல்லது பீட்டா அமைப்போ நிரந்தர தடைவிதிக்க கூடாது என்று  கோரிக்கை விடுத்தார்.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், “இதே பொன்.ராதாகிருஷ்ணன்தான், கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு தடை நீங்கும் என்றார். அது நடக்கவில்லை. இந்த ஆண்டும் கடைசி வரை அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இந்த ஆண்டும் தடை தொடர்கிறது. இந்த சூழலில் அவர் ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசுகிறாரா… அல்லது, பீட்டாவுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்ய வழி சொல்லித் தருகிறாரா” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்கள்.