திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம்செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான்.

இதையறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசிமகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும். சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.