திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது.

இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

274 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் பெற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தரிசித்து வணங்கிட, நம் வாழ்வு வளமாகும்.