திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது.

தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது.

சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.

இத்தலவிநாயகர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோவிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோவில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.

அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடு உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோவிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இக்கோவிலில் உள்ள தங்க ரதத்தை பக்தர்கள் முன்பதிவு செய்து இழுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார்.

அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.

சிவன் கோவில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.

மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோவிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.

பொதுவாக கோவில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோவில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும்.

திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.