திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.


ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட, முருகன் சம்காரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி, பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனைத் துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை ‘வீரஹத்தி‘ தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி, மாதவி நாதரை வணங்க வந்தார். அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட, அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீரை எடுத்து, சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து வணங்கினார். ‘வீரஹத்தி‘ தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய வீரஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

அத்துடன் தான் பிடித்து வழிபட்ட லிங்கத்திற்கு “திருமுருகநாதசுவாமி” என பெயரிட்டார். முருகன் வந்து வழிபட்டு சிறப்பு பெற்றதால் மாதவிவனம் “திருமுருகன் பூண்டியாக” மாறியது.

ஆயிரத்தெட்டு கிழக்கு பார்த்த சிவாலயத்தை வணங்கிய பலன், ஒரு மேற்கு பார்த்த சிவாலயத்தை வணங்கினால் கிடைத்து விடும். அது மட்டுமல்ல. ஒரு மேற்கு பார்த்த சிவாலயத்தை வணங்கினால் ஆயிரத்தெட்டு அசுவமேத யாகம் செய்த பலன் உண்டு. கோவை மாவட்டம் திருமுருகன் பூண்டி மேற்குபார்த்த பாடல் பெற்ற சிவத்தலம். சிவன் கோயிலாயினும் கூட, சிக்கலைப் போல இங்கு முருகனுக்கு தான் முக்கியத்துவம். இரண்டாயிரம் வருடம் பழமையான இத்தலத்தின் புராண பெயர் “மாதவிவனம், ஸ்கந்தமாபுரி.”

நால்வரில் ஒருவரான சுந்தரர் சேரநாட்டிற்கு வந்தார். சேரநாட்டு அரசன் அவருக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினான். பொருளுடன் அவர் திருமுருகன் பூண்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிவன் அவரைச் சோதித்தார். சுந்தரர் இனிமையாகப் பாடுபவர். இந்தப் பாடலைக் கேட்பதற்காக சுந்தரேசுவரக்கடவுள், வேடன் வடிவமெடுத்து, செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். இதை கவனித்த பிள்ளையார் சுந்தரருக்கு ஆதரவாக ஊர் மக்களை கூவி அழைத்தார். சிவனோ தான் யார் என்பதைச் சொல்லி, பிள்ளையாரை ஊர் கோடியிலேயே தங்குமாறு கூறினார். இன்னும் இந்த ஊரின் கோடியில் ‘கூப்பிடு விநாயகர்‘ வீற்றிருக்கிறார். இதன் பின் சுந்தரர் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, சிவனை கண்ணீர் மல்கி பாட, இறைவன் மகிழ்ந்து சுந்தரருக்கு காட்சி கொடுத்து, பொருளைத் திருப்பி கொடுத்து விட்டார். இன்றும் கூட இங்கு சிவாலயங்களில் மாசி மாதம் இந்நிகழ்ச்சியை பரி வேட்டை திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

இவரை வழிபட்டால் சித்த பிரம்மை பிடித்தவர்களுக்கு 41 நாட்களில் குணமாகும் என்பது நம்பிக்கை. எங்குமே குணமாகாத சித்த பிரமை, மன அமைதியின்மை ஆகியவை இத்தல முருகநாதரையும் சண்முகரையும் வழிபட்டு நீங்கப் பெறலாம்.