சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வைகோ, ராமதாஸ். அன்புமணி ராமதாஸ், சீமான்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத், தந்தையார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுதான் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள்.

ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

ஈ.வெ.ரா. திருமகன் அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர். ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

 மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய துயரத்தையும், இரங்கலையும் தெரிவித்தேன். தாங்க முடியாத இந்தத் துக்கத்தை அவரோடும், அவரது குடும்பத்தினரோடும், காங்கிரஸ் கட்சியினரோடும் பகிர்ந்துகொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக  நிறுவனர் ராமதாஸ்

பாமக  நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை  மனம் ஏற்க மறுக்கிறது. திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான்:

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஐயா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்துவாடும் ஐயா  ஈவிகேஎஸ் இளங்கோவன்அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகிச இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து  வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.