மிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.

இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப்பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போதும் கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தக் காணிக்கையை செலுத்துகிறார்கள்.

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார். சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான். கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது. கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒரு தனிக்கோவில் உள்ளது.