மதுரை: திருச்செந்தூரில் உள்ள தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான  சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான  நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில்,  அதை மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்ற கிளை  உத்தரவிட்டுள்ளது

திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தருமபுரம் ஆதின மடத்திற்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி. இந்த சொத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், அதை விட்டு வெளியேற மறுக்கின்றனர்.  ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். எனவே தருமபுரம் ஆதின மடத்தின் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை அணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த  விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தற்கான மூல ஆவணங்களையும் சிலர் போலியான பத்திரப் பதிவு செய்துள்ள ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக, திருச்செந்தூர் கோவில் ஆணையருக்கு உத்தரவிட்ட நிலையில் அவர், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது ஆக்கிரமிப்பு சம்பந்தமான ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,  திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  தற்போது ஆதீன மடத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களிடம் இருக்கும் ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கையை அறநிலையத்துறை ஆணையர் எடுக்க வேண்டும். அவ்வாறு மீட்கப்படும் நிலங்களை தருமபுர ஆதீன மடத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.