காதல் ரகசியம் 22 :பேச்சு பேச்சா இருக்கணும்!: டாக்டர் காமராஜ்

பாராட்டுக்களால் ஏற்படும் நல் மாற்றங்களைப் பார்த்தோம் அல்லவா.. இது குறித்து தொடர்ந்து பேசுவோம்.

புதிய விஷயங்கள் தான் வாழ்க்கையை எப்பொதும் இளமைத்துள்ளலோடும் ரசனையோடும் வைத்திருக்கும். துணையின் கைபிடித்து, புதிய உலகில் அறிமுகமாவதை ஒரு சபதமாக மேற்கொண்டு பாருங்கள். காலம் முழுக்க காதலால் இணைந்திருப்பீர்கள்.

வாக்குவாதங்களுக்கு இடமில்லாதபோதுதான் பாராட்டுகள் சாத்தியமாகும். ‘ அதெப்படி புருஷன் பொண்டாட்டின்னா சண்டை- சச்சரவு இல்லாமல் இருக்கும்?’ எனக் கேட்பது நியாயம்தான். ஆனால், இருவரும் மனது வைத்தால் இருவருக்குமான வாக்குவாதத்தை மகிழ்ச்சியுடன் முடிவுக்குக் கொண்டு வரலாம். அதன் மூலம் பாராட்டப் பழகலாம்.

வாக்குவாதத்தில் உங்களுக்குத் தேவை சுமுகமான முடிவு.ஆனால், பெரும்பாலான  வாக்குவாதங்கள்,, யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பதைக் குறிவைத்தே ஆரம்பித்து முடிகின்றன. ‘ இருவர் தரப்பிலும் நியாயங்களும் இருக்கும்… தவறுகளும் இருக்கும்’ என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசித் தீர்க்க வேண்டியிருக்கிறது… அதற்கான இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேச்சைத் தொடங்குங்கள். வேறு எதற்கு நல்ல நேரம் பார்க்கிறீர்களோ இல்லயோ, விவாதத்துக்கு நேரம் ரொம்ப முக்கியம். களைப்பாகவோ, அவசரத்திலோ இருக்கும் போது விவாதத்தை ஆரம்பிக்காதீர்கள்.

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள். யோசியுங்கள். அப்படியொன்று அமையவில்லையா? அவகாசம் விட்டு, இன்னொன்றைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

சில வாக்குவாதங்கள் உடனுக்குடன் பேசித் தீர்வாகாது. இருவரில் யார் கோபமாக இருந்தாலும், அந்தக் கணமே வாக்குவாதத்துக்குத் தற்காலிகமாக முற்றுப் புள்ளி வையுங்கள். வேறொரு நேரத்தில், துணையின் மனநிலையைத் தெரிந்து கொண்டு, விட்ட இடத்துப்  பேச்சுவார்த்தையைத் தொடரத் தயாரா எனக் கொட்டுக்கொண்டு தொடருங்கள். பேசும் மனநிலையில் இல்லை எனத் தெரிந்தால், ‘ வேற எப்பத்தான் பேசறது?’ எனக் கோபிக்காமல், சரியான தருணத்துக்காகக் காத்திருங்கள்.

எந்த விஷயத்துக்கான வாக்குவாதமாக இருந்தாலும் அது உங்கள் துணையை எந்த விதத்திலும் அசிங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ, உள்நோக்கம் கொண்டதாகவோ இருக்காது என இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குறிதி கொடுத்துக்கொள்ளுங்கள்.

பேச்சு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் சொல்வதுதான் இறுதிவார்த்தை அல்லது முடிவு என வலியுறுத்தாதீர்கள். அந்தத் தற்காலிக வாக்குவாதத்தில் வென்றுவிட்ட திருப்தி வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், உங்கள் துணையின் இதய சிம்மாசனத்தில் உங்களுக்கான இடம் ஆட்டம் காண ஆரம்பிக்கும். ஜாக்கிரதை!

மனைவி டாக்டர் ஜெயராணியுன் டாக்டர் காமராஜ்

அடர்ந்த காடு… அழகான இயற்கை… ஆரோக்கியமான சூழல்… பாதுகாப்பாக பயணம் செய்துவிட்டு வர ஒரு வாய்ப்பு வருகிறது.

முதல் ஜோடி,  அருவியையும் அடர்ந்த பசுமையையும் பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலிகளையும் ரசித்தபடியே காடு முழுக்க வளைய வருகிறார்கள். காட்டுக்குள் அவர்கள் இருந்த மனநிறைவுடன் வெளியே வருகிறார்கள்.

இன்னொரு ஜோடி… பத்தடி எடுத்து வைத்த்துமே, வாகனத்தின் சாவியத் தொலைத்து விட்டதை உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லிக் கொண்டு, கோபப்பட்டுக் கொண்டு, கவலை ஆத்திரமாக வெளிப்படுகிறது. சாவி கிடைத்தால் தானே வீட்டுக்குத்திரும்ப முடியும் என்கிற தவிப்பில், அந்தக் காட்டின் வனப்போ, வளமோ அவர்களை ஒரு சதவிகிதம் கூட ஈர்க்கவில்லை. பாத்யில் திரும்பவும் முடியாமல், நடந்ததை  மறந்து, நிகழ்காலத்தை ரசிக்கவும் முடியாமல், வெறுப்புடனும் விரக்தியுடனும் அவர்களது பயணம், இன்னொருவருக்கு  மட்டும் ஏன் வெறுமையைத் தர வேண்டும்? மனநிலையில் உண்டான மாற்றம்!

(இன்னும் பேசுவோம்..)

 

Tags: the-secret-of-love-series-part22