காதல் ரகசியம்: 21:  பாராட்டும் பாடம்! : டாக்டர் காமராஜ்

காதலிக்கிற  காலத்திலும்  திருமணமான  புதிதிலும்  துணை  என்ன  சொன்னாலும்  இனிக்கும்.  நிமிடங்கள்  ஓடும் …   வருடங்கள்   உறையும்.

ஆசையும்  மோகமும்  மங்கும்  வரை  துணை  என்ன செய்தாலும்  பாராட்டு…  என்ன  சொன்னாலும்  பாராட்டு…  பிறகு?  ஆசையோடும்   மோகத்தோடு காணாமல்  போவது  காதல் மட்டுமல்ல…  பாராட்டும்தான்.

உங்கள்   துணை  செய்கிற   விஷயம்  சிறியதோ,  பெரியதோ…  தயங்காமல்  பாராட்டிப்  பாருங்கள். சிறுக   சிறுகத்  தொலைந்து  கொண்டிருந்த  சுவாரஸ்யம்,  மீண்டும்  உங்கள்  வாழ்க்கையில்  வந்து ஒட்டிக்கொள்ளும்.  சரி…   இந்த  பாராட்டும்  மனப்பான்மையை  எப்படி  வளர்த்துக்  கொள்வது?

இந்தப்  பாடம்  கணவன்,  மனைவி  இருவருக்கும்தான்.

உங்கள்  கணவருக்கு  கிரிக்கெட்  பிடிக்கிறது.   உங்களுக்கு   கிரிக்கெட் மட்டுமல்ல…  அதை ரசிப்பவர்களையுமே  பிடிக்காது.  அவர்  எப்போது  மேட்ச்  பார்க்க  உட்கார்ந்தாலும், உங்கள் இருவருக்கும்  சண்டைதான்…  இப்படி  வைத்துக்  கொள்வோம்.  என்னவிட  கிரிகெட்தான் முக்கியமாப்  போச்சா…  என  நீங்கள்  கேட்க,  பதிலுக்கு  அவர்,  ‘எத்தனைகாலம்  பார்த்தாலும் போரடிக்காத  ஒரே  விஷயம்  கிரிக்கெட்தானே…  நான்  என்ன  செய்ய’  எனக்கி ண்டலடிக்க, அப்படியே  வாக்கு  வாதம்  முற்றி,  அடுத்த  சில   மணிநேரங்களில்  எங்கேயோ  போய் நிற்கும்.

அதற்குப்  பதில், ‘ அப்படி  இந்த  கிரிக்கெட்ல  என்னதான்  இருக்கு…   உங்க  அளவுக்கு  எனக்கு ரசிக்கத்  தெரியுமான்னு  தெரியலை…   எனக்கு  கொஞ்சம்  சொல்லிக்   கொடுங்களேன்…   என கணவரிடம்  அதைக்  கற்றுக்  கொண்டு  ரசிக்க  முயற்சி  செய்து  பார்க்கலாம்.  யார்  கண்டது?

கிரிக்கெட்  என்ற  வார்த்தையே  பிடிக்காத  நீங்கள்  பெண்கள்   கிரிக்கெட்  டீமில்  சேர்கிற அளவுக்கு  அதில்  ஆர்வமானாலும்  ஆச்சரியமில்லை!

இதே  அட்வைஸ்தான்  ஆண்களுக்கும்.  உங்கள்  மனைவி  ஜிம்  வகுப்பில்  சேர்ந்திருக்கிறார்  என வைத்துக்  கொள்வோம்.  ஆரம்ப  ஜோரில்  அதைப்  பற்றியே  அதிகம்  பேசுவார் .’  மனசுல  என்ன பெரிய  நடிகைன்னு  நினைப்போ…  என்றோ,  ‘ஜிம்ல   ஒர்க்  அவுட்  பண்ணி அழகிப் போட்டியிலாயா  கலந்துக்கப்  போறே…’  என்றோ  அவரை  மட்டம்  தட்டாதீர்கள்.  அந்த அனுபவத்தைப்  பற்றி  நீங்களாகவே  அவரிடம்  பேசுங்கள்  ஊக்கப்படுத்துங்கள்.   அவரது ஆர்வத்தைப்  பாராட்டுங்கள்.  முடிந்தால்  நீங்களும்  அவருடன்  இணைந்து  ஜிம்  செல்வது  பற்றி யோசிக்கலாம்.

டாக்டர் காமராஜ்

வாழ்க்கை  என்பது  எப்போதும்  ஒரே  மாதிரி  இருப்பதில்லை.  நேற்றுபோல  இன்று  இல்லை… இன்று  போல்  நாளை  இருக்கப்  போவதுமில்லை.  காலத்தின்  ஓட்டத்துக்கேற்ப,  காலம்  நமக்குக் கற்றுக்  கொடுக்கும்  அனுபவங்களுக்கேற்ப,  நாமும்  மாறிக்  கொண்டுதான்  இருப்போம்.  நமது  எண்ணம்,  சிந்தனை,  செயல்  என  எல்லாவற்றிலும் மாற்றங்கள்  இருக்கும்.  ஆனால், நமக்கெல்லாம்  என்ன  நினைப்பு  தெரியுமா?  அந்த  மாற்றம்   நம்மிடம்   மட்டும்தான்  என நினைத்துக்  கொண்டிருக்கிறோம்.  நம்மைப்  போலவே  நம் துணையும்  காலத்தால் பக்குவப்படுவார்,  சிந்தனைகளில்  மாறுவார்  என்பதை  உணர்வதில்லை.

அதை  உணரத்  தொடங்கினாலே,  துணையின்  வளர்ச்சியையும்  செயல்பாடுகளையும்  அவர் செய்கிற  சின்னச்  சின்ன  நல்ல  விஷயங்களையும்  மனதாரப்  பாராட்டவும்  கற்றுக்கொள்வோம்.

இதில்  முதல்  படி,  துணையின்  ஆர்வங்களைக்  கண்டுபிடிப்பதும்,  அதில்  நாமும்  ஆர்வம் காட்டப்பழகுவதும்.  விடிவதும்  தெரியாமல், பொழுது  முடிவதும்  தெரியாமல்  எந்திரத்தனமாக  ஒரே  மாதிரியான  விஷயங்களில்  இயங்கிக்  கொண்டிருக்கும்  தம்பதிகளின்  வாழ்க்கையில் பெரிதாக  பிரச்னைகள்  இல்லாமல்  இருந்தாலும்  சுவாரஸ்யங்கள்  இருப்பதில்லை.

அதைக்  தவிர்க்கத்தான்  துணையின்  புதிய  ஆர்வங்களில்  ஈடுபடுத்திக்  கொள்கிற   டெக்னிக். இருவரும்  சேர்ந்து  யோகா,  நடனம் ஏதே னும்  ஒரு தொழிற்பயிற்சி  என   உங்களுக்கு  முற்றிலும்  புதியதொரு  விஷயத்தில்  ஈடுபடுங்கள்.  ’ஐயையே…  இதெல்லாம்  எனக்கு  சரி வராது.  ’நீ  சொன்னியேன்னு  வந்தேன்  பாரு ‘  என  பாதியில்   சலித்து  விலகாதீர்கள்.  மாறாக,  ’நீ சொன்னியேன்னு  வந்தேன்.  எனக்கு ரொம்பப்  பிடிச்சிருக்கு…  இது  ஒரு  புது  அனுபவமா இருக்கே…’  எனப்  பாராட்டுங்கள்.

பிறகு மாற்றத்தைப் பாருங்கள்!

(இன்னும் பேசுவோம்…)

 

Tags: the-secret-of-love-series-part-21, காதல் ரகசியம்: 21:  பாராட்டும் பாடம்! : டாக்டர் காமராஜ்