காதல் ரகசியம் 2: முடியுமா… அது முடியுமா?: டாக்டர். காமராஜ்

காதல் ரகசியம் 2:

முடியுமா… விருந்தாளியாய் நடத்த முடியுமா?

ங்கள் இணையரை, விருந்தாளி போல் நடத்துங்கள் என்று கடந்த வாரம் சொன்னேன் அல்லவா?

அதில் ஒரு முக்கிய விசயம் இருக்கிறது. அதாவது,  வேண்டாத விருந்தாளி  போல் நடத்தக் கூடாது.  நீங்கள் மிகவும் நேசிக்கும்,  எப்போதும் உங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று உடன் இருக்க விரும்புகிற, விருந்தாளியாக உங்கள் இணையரை நினைக்க வேண்டும்.

இப்படி உங்களை மிகவும் ஈர்த்த விருந்தாளி உங்கள் இல்லத்துக்கு வருகிறார் என்றால், அவரை எப்படியெல்லாம் வரவேற்பீர்கள், உபசரிப்பீர்கள்!

அவருக்கு பிடிக்காதவைகளை ஒதுக்கி, அவருக்கு பிடித்தவைகளை பார்த்து பார்த்து  செய்வீர்கள் அல்லவா?  அந்த விருந்தாளியின் மனம் எந்த விதத்திலும் நோகும்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக எத்தனை கவனத்துடன் நடந்துகொள்வீர்கள்!

உதாரணமாக ஒரு விசயத்தைப் பார்க்கலாம். .நீங்கள் மிகவும் ஆசை ஆசையாக ஒரு பொருளை வாங்கி வைத்திருக்கிறீரகள்.. அது கண்ணாடியாகவோ, பொம்மையாகவோ.. எதுவானாலும் இருக்கட்டும்.

அதை விருந்தாளி தவறுதலாக உடைத்து விடுகிறார்.

நீங்கள் என்ன செய்வீர்கள்..?  அவரை கடிந்து கொள்வீர்களா? நிச்சயமாக இல்லை. அவர் உங்கள் மனம் நிறைந்த விருந்தாளி. ஆகவே அவர் குறிப்பிட்ட பொருளை உடைத்ததற்காக அவரை கடிந்து கொள்ள மாட்டீர்கள். அவரின் மீது உங்களுக்குள்ள அன்பும், மரியாதையும் அந்தச் செயலை மன்னித்து மறக்கச்செய்கிறது அல்லவா?

அதாவது அவருக்கு பிடிக்காததை நீங்கள் செய்வதில்லை. தவிர உங்களுக்கு பிடிக்காததை அவர் செய்தாலும் சகித்துக் கொள்கிறீர்கள்.

இதே.. இதே அணுகுமுறையை  உங்கள் வாழ்க்கைத் துணையிடமும் கடைப்பிடித்துப் பாருங்களேன்.

முடியாது என்கிறீர்களா..?

யோசித்துப் பாருங்கள். உங்கள் இணையரை நீங்கள் காதலிக்கும்போதோ அல்லது திருமணம் ஆன புதிதிலோ இப்படித்தானே நடந்துகொண்டீர்கள்?

நாட்கள் செல்லச் செல்லத்தானே இதெல்லாம் மாறுகின்றன. வாழ்க்கைத் துணையிடம் அடிக்கடி ஆத்திரத்தைக் காண்பிப்பது எல்லாம் நடக்கிறது.

ஆகவே வாழ்க்கைத்துணையிடம், உங்களுக்கு மிகப் படித்த விருந்தினரிடம் நடந்துகொள்வதைப்போல நடந்துகொள்ளுங்கள்.

டாக்டர். காமராஜ்

அடுத்த முக்கியமான விசயம். பேசும் முறை.

“ஒரு சொல் வெல்லும்.. ஒரு சொல் கொல்லும்” என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் அல்லவா?  அதைக் கடைபிடிக்க வேண்டும்.

அதாவது வன்முறை இல்லாத, அன்பான பேச்சு.

வன்முறையில்லாத வார்த்தைப் பறிமாற்றத்தை நான்கு நிலைகளாக பழகுங்கள்.

1] நீங்கள் விரும்பாத ஒரு செயலை உங்கள் துணை செய்கிறார் என்று  வைத்துக் கொள்வோம். உடனே உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரமாக  வானத்துக்கும் பூமிக்குமாக தாண்டவமாடுவதுதான் பலரது வழக்கமாக இருக்கிறது. அப்படி இன்றி  அமைதியாக அதை எதிர் கொள்ளலாம்.

’நீ ஏன் அப்படிச் செய்தாய்?” என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, “நீ இப்படிச் ’செய்வாய் என்று நான் எதிர்பார்த்தேன்” என்று அமைதியாக உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தலாம்.

2] அந்த  சம்பவத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைப் பற்றிப் பேசும்போது, ’உன்னால் இப்படி ஆகிவிட்டது. நீ என்னை காயப்படுத்தி விட்டாய்.’ என்று துணையை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, “எனக்கு மன வருத்தம் ஏற்பட்டுவிட்டது.. மனது சங்கடமாக இருக்கிறது” என்று சொல்லுங்கள்.

3] அதே போன்ற ஒரு சம்பவம் மறுபடி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள். இது  குறை கூறும் தொனியில் இருக்கக்கூடாது.  அன்போடு எடுத்துச் சொல்லுங்கள்.

4] அறிவே கிடையாதா ..ஏன் இப்படிச் செய்தாய் என்று ஆத்திரத்தைக் கொட்டாமல்,  தயவு செய்து இதை இப்படிச் செய்யமுடியுமா? என்று வேண்டுகோளாக வையுங்கள்.

இந்த நான்கு ஆலோசனைகளையும்  வாழ்க்கையின் எல்லா தருனங்களிலும் பின் பற்றிப் பாருங்கள்… உங்கள் துணையை காயப்படுத்தாமலே நீங்கள் விரும்பியதை நிச்சயம் பெருவீர்கள்.

இந்த ஆலோசனை தம்பதியருக்குள் மட்டுமல்ல… பிள்ளைகள் பணியாளர்கள்,  என்று அனைவரிடமும் நடந்துகொள்ளுங்கள். இது எல்லோரிடத்திலுமே அன்பையும் நட்பையும் உறவையும் வளர்க்கும்  அணுகுமுறை ஆகும்.

தம்பதியருக்குள் நடந்துகொள்ள வேண்டிய அடுத்த விஷயம்  பார்ப்போம். விஷயம் என்பதை விட ஒரு சொல்.

ஆமாம்.. அந்த ஒரு மந்திரச் சொல், உங்கள் வாழ்க்கையையே அன்பான நந்தவனமாக்கிவிடும்.

அது என்ன சொல்?

(ரகசியம் தொடரும்)


English Summary
the-secret-of-love-series-2- Can you be a guest?- dr-kamaraj