‘‘சிறை செல்ல தயாராக இல்லை’’…. ஜார்கண்டில் பாஜ அமைச்சர் கொந்தளிப்பு

ராய்ப்பூர்:

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் வெளிநடப்பு செய்த சம்பவம் ஜார்கண்ட் பாஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஒப்பந்தத்தை குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு நிறுவனத்துக்கு புதுப்பித்து வழங்க ஜார்கண்ட் மாநில பாஜ அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோக துறை அமைச்சர் சர்யூ ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் சிறைக்கு செல்ல தயாராக இல்லை என்று கூறி அவர் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எனினும் ஒப்பந்தத்தை புதுப்பித்து வழங்க அமைச்சரவை முடிவு செய்தது.
மேலும், முன்பே சுரங்க ஒப்பந்தத்தை புதுப்பித்து வழங்க அமைச்சரவை முடிவு செய்துவிட்டதாக அமைச்சர் ராயிடம், அவரது சக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எதுக்கு ஒப்புக்கு அமைச்சரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
விரைவில் இது தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கும். அப்போது விதிமீறல் வெளியே வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டி, ரகுபர் தாஸ் ஆட்சியில் உள்ள அதிகாரிகள் சிலர் கூறுகையில், இரும்பு தூது பொருட்கள் சுரங்க ஒப்பந்தங்களை புதுப்பித்து வழங்க தாமதம் ஏற்படுவதால் ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.

அமைச்சர் வெளிநடப்பு செய்தது, ஏதோ எதிர்கட்சியின் செயல்பாடு போல் இருந்துள்ளது. இந்த மூத்த அமைச்சர் ராய், ஊழலுக்கு எதிராக போரடக்கூடியவர். இவரது முயற்சியால் வெளிகொண்டு வரப்பட்ட கால்நடை தீவன ஊழல் வழக்கில் இரண்டு முன்னாள் முதல்வர்கள் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.