வாஷிங்டன்,:

பான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

கணினி தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் தற்போது எப்படி இருப்பார்கள் என்று சித்தரிக்கப்பட்டு அவர்களின் படங்கள்  வெளியிடப்பட்டுள்ளன.

மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி பறந்த  அமெரிக்க விமானமான பாம்ஆம் கடத்தப்பட்டது. 379 பேருடன் கடத்தப்பட்ட அந்த விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தரை யிறக்கப்பட்ட போது, விமான நிலைய பாதுகாப்பு உடையில் வந்த பயங்கரவாதிகள் விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விமானத்தின் பணிப்பெண்ணாக  இந்தியாவைச் சேர்ந்த  நீர்ஜா பானோத் என்பவர் பணி புரிந்து வந்தார்.

விமானத்தை கடத்தியவர்கள்  ‘அபு நிதால்’ என்ற லிபியாவை சேர்ந்த பயங்கரவாத குழு என்று தெரிய வந்தது. தங்களது குழுவை சேர்ந்தவர்கள் சைப்ரஸ் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து பயங்கரவாதிகளிடம் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில், விமானத்தினுள் பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

இந்த தாக்குதலில்12 இந்தியர்களும், 2 அமெரிக்கர்கள் உள்பட  20 பயணிகள் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த நேரத்தில் விமானப்பணிப்பெண்ணாக இருந்த நீர்ஜா பனோத் சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தில் இருந்த  எமர்ஜென்சி வழியாக சில பயணிகளை வேளியேற்றி வந்தார்.

தற்செயலாக இதையறிந்த பயங்கரவாதிகள் நீர்ஜாவை சுட்டுக்கொன்றனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் குண்டடிப்பட்டு காயமடைந்தனர்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, விமானத்தை கடத்தியது  வாடவுட் முகம்மது ஹபீஸ் அல் துர்கி, ஜமல் சயீத் அப்துல் ரகீம், முகம்மது அப்துல்லா காலி ஹூசைன் ரஹ்யால் மற்றும் முகம்மது அகமது அல் முன்வர் என்பது தெரியவந்தது.

இவர்கள் குறித்து துப்பு அளித்தால் 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. மேலும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது.

இந்த கடத்தல் நடைபெற்று முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது, நான்கு பயங்கரவாதி களின் வயதான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் ஒரு சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்த முடியாததால் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.