டிகை சுமலதாவின் எம்.பி.கனவை சிதைத்து விட்டது- காங்கிரஸ்.

அவரது கணவர் அம்பரீஷின் மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளு மன்றத்தில் அடி எடுத்து வைக்க உத்தேசித்திருந்தார்- சுமலதா.

அந்த தொகுதியில் திரளாக இருக்கும் அம்பரீஷ் ரசிகர்கள்- ‘’மாண்டியாவில் நீங்கள் நின்றால் வெற்றி நிச்சயம்’’ என்று உசுப்பேற்ற- சுமலதாவுக்கு அரசியல் ஆசை துளிர் விட்டது.

களம் இறங்க ஆயத்தமானார். காங்கிரஸ் கை கொடுக்கும் பட்சத்தில், தொகுதியில் உள்ள அம்பரீஷ்  ரசிகர்கள் ஆதரவுடன் கணவர் இறந்ததால் எழுந்திருக்கும் அனுதாப அலை உதவியுடன் கரை சேர்ந்து விடலாம் என்று கணக்கு போட்டார் சுமலதா.

அவரது  ஆசையில் மண்ணை அள்ளி போட்டு விட்டது காங்கிரஸ்.அந்த கட்சியின் மூத்த தலை வரும், முன்னாள் முதல்வருமான சித்தராமய்யா ஹூப்ளியில் நேற்று அளித்த பேட்டியில் சுமலதாவுக்கு, ஆதரவு இல்லை என்று அடித்து கூறிவிட்டார்.அவரது பேட்டி இது:

‘’மாண்டியாவில் சிட்டிங் எம்.பி.யாக மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்தவர் இருக்கிறார்.தொகுதி பங்கீட்டில் அந்த தொகுதி ஜனதா தளத்துக்குத்தான் போகும்.அதை நாங்கள் கேட்க முடியாது. சுமலதா சுயேச்சையாக போட்டியிடுவது அவரது விருப்பம்.’’

சித்தராமய்யாவின் அறிவிப்பு சுமலதாவுக்கு அதிர்ச்சியை கொடுக்க –ஆனந்த கூத்தாடுகிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.

ஏன்?

எம்.பி. தேர்தல் சம்மந்தமாக கவுடா குடும்பத்தில் வெட்டு-குத்து நிகழ இருந்தது.மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேரும், விழுதுகளுமாய் தேவகவுடாவின் குடும்பமே உள்ளது.

கட்சியின் நிறுவனர்- பெரியவர் தேவகவுடா.

மாநில முதல்வர்-மகன் குமாரசாமி.

பொதுப்பணித்துறை அமைச்சர்- இன்னொரு மகன்-ரேவண்ணா.

மாநிலத்தை மகன்கள் பாகம் பிரித்துள்ள நிலையில்- டெல்லிக்கு செல்ல ஆசைப்பட்டனர் –பேரன்கள்.

ஒருவர் ,குமாரசாமியின் மகன்-நிகில்.சினிமா நடிகராக இருக்கிறார்,

இன்னொருவர் ,ரேவண்ணாவின் –மகன் பிரஜ்வால்.

அந்த மாநிலத்தில் உள்ள ஹசன் மக்களவை தொகுதி,கவுடா குடும்பத்து சொத்தாக பரம்பரையாக இருந்து வருகிறது.’’அந்த தொகுதியில் பிரஜ்வால் நிற்பார்’’ என தேவகவுடா சொல்ல-

‘’ம்..ஹூம்.. ஹசனில் எனது மகன் நிகில் தான் வேட்பாளர்’’ என குமாரசாமி எகிற-குடும்பம் இரண்டானது.

நல்லவேளையாக ‘மாண்டியா உங்களது’ என காங்கிரஸ் விட்டுக்கொடுத்து விட்டதால்- அங்கு நிகிலை வேட்பாளராக அறிவித்து விட்டார்- கவுடா.

ஆமாம்.

ஒரு பேரன்- ஹசன் தொகுதி வேட்பாளர். இன்னொரு பேரன்-மாண்டியா வேட்பாளர்.

‘’ஸ்வீட் எடு..கொண்டாடு’’என தேவகவுடா குதூகலத்தில் திளைத்திருக்க-

குமாரசாமியின் மனைவி அனிதா நேற்று மாண்டியாவில் உள்ள கோயிலில் மகன் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.

இது தேவகவுடாவுக்கு தற்காலிக மகிழ்ச்சி தான்.இரண்டு பேரன்களும் ஜெயித்து எம்.பி.யாகி விட்டால்-

‘’யார் மத்திய அமைச்சர்?’’என்பதில் இன்னொரு பஞ்சாயத்து இருக்கும்.

–பாப்பாங்குளம் பாரதி