பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தொடர்பான டெண்டர் எதிர்த்து வழக்கு: அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

ரசு பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்க டெண்டர் கோரியுள்ளது. இதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது

தமிழக அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘ஹை – டெக்’ கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட  இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தி ருந்தார். தற்போது தமிழக பள்ளிப்பாடப் புத்தங்களில் பார் கோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பார் கோடுகளை பயன்படுத்தி, வீடியோவாகவும் பாடத்தை காண முடியும். அதற்கு ஏற்றார் போல்  தமிழகம் முழுவதும், 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும், மத்திய அரசின், ஐ.சி.டி., என்ற, கணினி வழி கற்றல் திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக  மாநிலம் முழுவதும், 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஹை – டெக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்காக, 420 கோடி ரூபாயில் டெண்டர் கோரியுள்ளது. இதில், சர்வதேச அளவில், பிரபலமான நிறுவனங்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஒவ்வொரு ஆய்வகங்களிலும்,  தலா, 10 கணினிகள் வீதம், மொத்தம், 60 ஆயிரத்து, 290 கணினிகள், இணையதளம், ‘வை – பை’ வசதியுடன் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் முறையாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில்,  ரூ.50கோடிக்கு மேலான டெண்டரை வர்த்தக இதழிலும் வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால், அரசு அதை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  இதுகுறித்து  தமிழ்நாடு பாடநூல் கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டுவழக்கை ஜன8க்கு ஒத்தி வைத்தது.

ஏற்கனவே இதுபோன்ற டெண்டர்கள் 6 முறை வெளியிடப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The case against the tender of computer hitech labs in schools: Court orders to respond to the government, பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தொடர்பான டெண்டர் எதிர்த்து வழக்கு: அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
-=-