சென்னை:

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதான கட்சிகள் புறக்கணித்தன.

இது விவசாயிகளிடையேயும், தமிழக மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டில்லியில் 34-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும்,  விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதற்காகவும் தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில்  மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

காலை 10 மணி அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் 9.15 மணிக்கே அறிவாலயம் வந்துவிட்டார்.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன்,

மற்றும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், கொங்குநாடு முன்னேற்ற கழக கொள்கைபரப்பு செயலாளர் கோவிந்தசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து  ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகள் பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி  அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து, அனைத்துக்கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டமும், தமிழகத்தில் பந்த் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முக்கியமான இந்த விவசாயிகள் பிரச்சினையில் பிரதான கட்சிகளான அதிமுகவின் இரு அணிகளும் பங்கேற்கவில்லை.

மேலும், பா.ம.க., தேமுதிக, மதிமுக கட்சிகளும் திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

இது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையில்கூட தமிழகத்தில் அரசியல் கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லாதது தமிழக மக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.