உதாரணமா எடுத்துக்கிட்டு உஷாரா இருங்க மக்களே ..
ஒரு சின்னப் பையன் காரியம்..
இத்தனை பேர துவம்சம் பண்ணுது..
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
கேரளாவின் கொச்சியில் 17 வயது பையன் மெர்சிடென்ஸ் பென்ஸ் காரை ஓட்டி மோதியதில் டூவீலரில் சென்ற 55 வயது ஜெயகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார்.
லைசன்ஸ் எடுக்க தகுதியே இல்லாத மைனர் பையனை போலீசார் உடனே கைது செய்தனர். பையனின் தந்தை, மாவட்ட நீதிபதி.
பிரச்சனை பெரிதாக, பிறகு மைனர் மகனை வண்டி ஓட்ட அனுமதித்திற்கும் வாகன உரிமையாளர் என்ற வகையிலும் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் சிறுவன் உடனடியாக நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டான்.

பலியானவரின் மனைவி உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, நீதிபதி குடும்பம் என்றால் சட்டமும் காவல்துறையும் இஷ்டத்திற்கு வளையுமா என விமர்சனம் சுழன்று சுழன்று அடித்தது.
விளைவு, நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து அரசு தரப்பில் அதிரடி ஆக்சன்கள்..
ஏற்கனவே சேரநல்லூர் காவல் நிலைய போலீசார் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர்.
இப்போது ஆரம்பம் முதலே இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்று கொச்சி போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சம்பவம் நடந்த உடனே தலையிட்டு வழக்கு விசாரணையை மேற்பார்வை செய்திருந்தால் சிறுவன் உடனடியாக ஜாமினில் வெளிவரும் அளவுக்கு எஃப் ஐ ஆர் வீக்காக இருந்திருக்காது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கமிஷனர் தூக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்..
தென் மண்டல ஐஜி நிஷாந்தினி, கொச்சிக்கு புதிய கமிஷனர்.
ஏடிஜிபி-விஜயன் களத்தில் இறங்கி விசாரணை நடத்திய பிறகு அடுத்தடுத்து இந்த மாற்றங்கள்.
இன்னொரு பக்கம்,
ஆரம்பத்தில் க்ரைம் பிரான்ச் விசாரணைக்கு ஒத்துழைத்த மாவட்ட நீதிபதி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்யக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்.
மைனர் பையனின் பெயிலை கேன்சல் செய்ய காவல்துறை தரப்பில் மும்முரம்.
நீதிபதியின் மைனர் மகன் கார் ஓட்டி விபத்து-உயிர் பலி என்ற விவகாரம் கேரளா முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
சிறுவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈவிரக்கம் பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்ற உத்தரவு பறந்திருக்கிறது.
கோட்டயம் பகுதியில், 16 வயது பையன் கார் ஓட்டி நேற்று சிக்க, அவன் தாயார் மீது வழக்கு பதிவு.
பையனின் instaவை ஆராய்ந்ததில் பைக், கார் ஓட்டுவது போல் வீடியோக்கள்..
பைக்கையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.
பைக்கை சில நாட்களுக்கு முன்புதான் அந்த குடும்பம் வாங்கி இருக்கிறது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் பைக்கின் பழைய ஓனர் மீதும் வழக்கு பதிவு. எப்படி எல்லாம் விதி விளையாடுது பாருங்க.
சட்டங்கள் எல்லாமே ஏற்கனவே இருப்பவைதான். பெற்றோர் மீது உள்ள கரிசனத்தினால் அமைதி காத்தான. ஆனால் இனிமேல் அமைதியாக இருக்காது.
எதுக்காக இவ்ளோ விலாவரியா மாஞ்சி மாஞ்சி சொல்றோம்னா, செல்லம் செல்லம்னு சின்ன பசங்க கிட்ட வண்டியை கொடுத்தா, இவ்ளோ சிக்கல்ல நீங்களும் மாட்ட வேண்டியது வரும்ன்றதாலதான்.