விருதுநகர்:

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை வீட்டை உடைத்து கைது செய்த போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வரும் நிர்மலாதேவி என்பவர், தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படியும், இதன் காரணமாக அதிக மதிப்பெண் மற்றும் பணமும் கிடைக்கும் என பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து கல்லூரி முன்பு பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியையின் ஆடியோ குறித்து புகாரும் பதிவு செய்யப்பப்டடது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலாதேவி மீது விசாரணை கமி‌ஷன்  அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி செயலாளரும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் துணைவேந்தர் செல்லத்துரையும் கூறியிருந்தார். மேலும் கவர்னர் பன்வாரிலும் உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனை அடுத்து, ஏ.டி.எஸ்.பி மதி அவரிடம் விசாரணையை தொடங்கினார்.

இரண்டாவது நாளான இன்றும் நிர்மலா தேவியிடம் மதி விசாரித்து வருகிறார். நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், முழு விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றதாகவும் மதி தெரிவித்துள்ளார்.

இது விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.